நாம் மறந்துவிட்ட குடும்ப விழுமியங்களை ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் நினைவுபடுத்துகிறது’ – ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்- இவர் ‘டான்’, ‘தலாஷ்’, மற்றும் ‘அந்தாதூன்’ போன்ற வெற்றி பெற்ற பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியவர். இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘மகரிஷி’ திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ எனும் திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை பரசுராம் பெட்லா இயக்கியிருக்கிறார். வாசு வர்மா இப்படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன் பகிர்ந்து கொண்டார்.

” சினிமா பள்ளியில் ஒளிப்பதிவினை கற்றுக் கொண்டேன். கேமராவை பயன்படுத்துவதற்கான அனைத்து பயிற்சிகளையும் முறையாக பெற்றிருக்கிறேன். மேலும் கூடுதலான சில விசயங்களை உலக சினிமாக்களை பார்வையிடுவதன் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். பல வருடங்களாக தெலுங்கு சினிமாக்களை பார்த்து வருகிறேன். கிருஷ்ணாவின் திரைப்படங்களையும், புராண கதைகளைக் கொண்ட படங்களையும் தான் அதிகமாக பார்ப்பேன். நாம் அனைவரும் அடிப்படையில் வணிகத்தனம் கொண்டவர்கள். அதனால் தான் வாழ்க்கையை விட திரைப்படங்கள் பெரிது என நினைக்கிறோம். அதனால் தான் ஒளிப்பதிவின் அடிப்படையில் காட்சிகள் மிகவும் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒளிப்பதிவு என்பது ஒரு திறமை. அதற்கென்றொரு அழகியல் உணர்வு உள்ளது. காட்சியியல் உணர்வும் உண்டு. இதனை நாங்கள் எங்களுக்கான படைப்புகளில்… திரைப்படங்களில் பயன்படுத்துகிறோம். ஒரு திரைப்படத்திற்கு தேவையானது என்றால் மட்டுமே புதிய உபகரணங்களை பயன்படுத்துகிறேன். இந்த புதிய லென்ஸை பயன்படுத்தினேன். இந்த புதிய கேமராவை பயன்படுத்தினேன் என்று சொல்ல முயலவே இல்லை. எந்த மாதிரியான காட்சிகள் தேவைப்படுகிறதோ.. அதை மட்டுமே எடுக்கச் சொல்கிறார்கள். அந்தப் படம் மற்றும் அதற்கு என்ன உபகரணங்கள் தேவையோ.. அதை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

‘ஃபேமிலி ஸ்டார்’ படம் ஒரு அழகான திரைப்படம். ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனின் கதை. குடும்பத்திற்காக அவர் ஆற்றும் கடமையை நல்ல மெசேஜுடன் சொல்லி இருக்கிறோம். காலனி போன்ற ஒரு அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினோம். கதை மற்றும் கதாபாத்திரங்கள் இயல்பானவை என்பதை பிரதிபலிக்கும் வகையில் காட்சி அமைப்பை உருவாக்கியுள்ளேன். ட்ரோன் காட்சிகள் இல்லை. ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்திற்கு தேவையில்லாத எந்த பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளும் இல்லை. படத்தை இயற்கையான ஒளி அமைப்பில் படமாக்கி இருக்கிறோம். அதனால் படம் பார்க்கும் பொழுது காட்சிகள் அழகாக இருப்பதை காண்பீர்கள். நடுத்தர வர்க்கத்து வீட்டின் அமைப்பை நீங்கள் திரையில் பார்த்தால்… உங்களுடைய வீடு போல் தெரியும். இந்தப் திரைப்படத்தின் கதை கள பின்னணியை எளிமையான அமைப்பில் இயக்குநர் பரசுராம் உருவாக்கி இருக்கிறார். விஜய் தேவரகொண்டாவும் மிருனாள் தாக்கூரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். படத்தில் இணைந்து பணியாற்றிய நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் எங்களுக்கு நிறைவான பங்களிப்பை வழங்கினர்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ” ஃபேமிலி ஸ்டார் நாம் மறந்துவிட்ட…. புறக்கணித்து விட்ட.. கூட்டுக் குடும்பத்தின் மதிப்புகளையும், குடும்ப அமைப்பின் விழுமியங்களையும் பேசும் திரைப்படம். இந்தியா முழுவதும் கூட்டுக்
குடும்பம் என்பது மறைந்து தனிக்குடித்தனம் என்பது அதிகரித்து விட்டது. குடும்ப உறுப்பினர்களின் சங்கமம் என்பதும் நடைபெறவில்லை. ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் மறைந்துவிட்ட குடும்பத்தின் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், குடும்ப உறுப்பினர்களின் ஒன்று கூடலையும் நினைவுபடுத்தும் வகையில் உருவாகி இருக்கிறது. இது ஒரு இந்திய குடும்பங்களின் கதை. அத்துடன் நல்லதொரு காதல் கதையும் கூட. இயக்குநர் பரசுராம் தெளிவான சிந்தனைகளுடன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சில புதிய விசயங்களை அவர் முயற்சித்துள்ளார். இதனுடன் கமர்சியல் விசயங்களை இணைத்துள்ளார். இயக்குநர் பரசுராம் என்னுடைய பாணியிலான பணியை மிகவும் ரசித்தார். பாராட்டினார். இந்தத் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று என்னால் தற்போது நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எப்படிப்பட்ட வரவேற்பினை அளிப்பார்கள் என்பதனை எளிதாக கணிக்க முடியாது. சில சாதாரண படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. சில சிறந்த படங்கள் தோல்வி அடைந்தும் இருக்கிறது.

நான் இதற்கு முன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன். தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பின் தரம் குறித்தும் அந்த நிறுவனத்தின் மதிப்பு குறித்தும் தெரியும். மீண்டும் இந்த நிறுவனத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியை அளிக்கிறது. விஜய் தேவரகொண்டா நல்ல திறமையான நடிகர். அவருடைய நடிப்பில் செயற்கை இருக்காது. அவர் நடிப்பை வெளிப்படுத்துவதில் தனித்துவம் மிக்கவர்.

என் மகள் மாளவிகா- தனக்கென ஒரு நற்பெயரை சம்பாதித்துள்ளார். நான் எந்த திரைப்படத்திற்கும் அவரது பெயரை பரிந்துரைப்பதில்லை. அப்படி செய்வதும் சரியல்ல என்று நீங்கள் நினைத்தால்.. அவர் நடிகையாக தனது திறமையை நிரூபிக்க வேண்டும். இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘தங்கலான்’ திரைப்படம் மாளவிகாவிற்கு நல்ல பெயரை பெற்று தரும். பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் உருவான ட’ தி கோட் லைஃப் -ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தில் நான் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றதால் அதிலிருந்து விலகி விட்டேன்” என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *