நிச்சயமாக ‘சூது கவ்வும் 2’ வெற்றி பெறும், ரசிகர்களுக்கு பிடிக்கும்! திரைப்படத்தின் முன்னோட்டம் விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித்!

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் ‘மிர்ச்சி சிவா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இம்மாதம் பதிமூன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர். ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை, இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத், படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ், கலை இயக்குநர் சுரேந்தர், நடிகர்கள் வாகை சந்திரசேகர், மிர்ச்சி சிவா, அருள்தாஸ், ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ”தயாரிப்பாளர்கள் சி.வி.‌குமார் மற்றும் தங்கராஜ் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ரசிக்கும் படி சுவாரசியமாக இருக்கின்றன. நிச்சயமாக இந்த திரைப்படம் வெற்றி பெறும். ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

சென்னை 28 படத்தில் நான் பணியாற்றும்போது மிர்ச்சி சிவாவும் அதில் நடித்திருந்தார். அவருடைய திறமை இன்னும் வெளிப்படவில்லை என்று தான் நான் கருதுகிறேன். நல்லதொரு தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவர் வெல்வார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.‌

தயாரிப்பாளர் சி வி குமாரிடம் வாய்ப்பு பெற்றது தனி கதை. நானும் என்னுடைய நண்பரும் இணைந்து எங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி, அதன் மூலமாக வாய்ப்பினை பெற்றோம். அது மறக்க இயலாத நிகழ்வு.

பின்னர் நான் சந்தோஷ் நாராயணனை சந்தித்தேன். அவருடைய இசையில் உருவான பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு வேறு மாதிரியான இசை வேண்டும் என்று கேட்டேன். அவர் அதற்கும் தயாராக இருந்தார். இன்று அவர் தனித்துவமான அடையாளத்துடன் இருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்தார். இன்று புதிய சினிமா உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளிகளுக்கு அவர்தான் முதல் தேர்வு. அவருடைய திறமையை கண்டெடுத்த சி வி குமாருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ சூது கவ்வும் 2 படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தர வேண்டும் என வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி, நன்றி,” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ”பா ரஞ்சித் மின்னஞ்சல் அனுப்பி தயாரிப்பாளர் சி வி குமாரை கவர்ந்தார். நான் அவருக்கு ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பி வாய்ப்பினை பெற்றேன். நானும் நலன் குமாரசாமியும் குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட பிறகு திரைப்படங்களை உருவாக்குவதற்காக தயாரிப்பாளர்களை அணுகத் தொடங்கினோம். தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் ஸ்டைல் எனக்கு என் மீது இருந்த தன்னம்பிக்கையை குறைத்து விட்டது. கதை சொல்லும் விதம் எனக்கு பிடிபடவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி அவர்களை சம்மதிக்க வைப்பதெல்லாம் முடியாது. அதனால் நமக்கெல்லாம் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று நம்பினேன். அந்த தருணத்தில் தான் அட்டகத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தயாரிப்பாளர் மதுரையிலிருந்து வருகை தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவரை ஃபேஸ்புக்கில் பின் தொடர்ந்தேன். ஒரு நாள் அவருடைய சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து கதையை கேட்டார்.‌ அவரை சந்தித்த உடன் நான் சொன்ன முதல் வார்த்தை எனக்கு கதை சொல்ல வராது என்றேன், அவர் பரவாயில்லை திரைக்கதையை கொடுங்கள் என்றார். அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் கதையை வாசித்து விட்டு படம் தயாரிக்கலாம் என்றார். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேடையில் தற்போது நின்றிருக்கும் அனைத்து திறமைசாலிகளையும் உருவாக்கியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சூது கவ்வும் படத்தின் கதையை நலன் குமாரசாமி எழுதும்போதே எனக்கு தெரியும். அவர் ஃபாதர் ஆப் டார்க் ஹுயூமர். அவருடைய திரைக்கதை சிறப்பாக இருக்கும். சூது கவ்வும் படத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இதற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்புள்ள ஒரே கதாபாத்திரம் அருமை பிரகாசம். அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்,” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசுகையில், ”சூது கவ்வும் படத்தை உருவாக்கும் போதே மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது அதனை 47 நாட்களில் உருவாக்கினோம். அதன் பிறகு நீண்ட தூரம் பயணித்து விட்டேன். அது ஒரு மேஜிக் போல் நடந்தது.

சி வி குமார் ஸ்கிரிப்ட் படித்து அதனை நன்றாக ஜட்ஜ் செய்யக்கூடிய திறமை பெற்றவர். அவர் ஸ்கிரிப்டை மட்டுமல்ல டைரக்டரையும் ஜட்ஜ் செய்யக்கூடியவர். திறமையான இயக்குநர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றால் அதில் அவருடைய கணிப்பும் இருக்கிறது.
சூது கவ்வும் 2 படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்,” என்றார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ”இயக்குநர்கள் பா ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இதுவரை எந்த நிகழ்வுக்கும் ஒன்றாக வந்ததில்லை என நினைக்கிறேன். இங்கு அவர்கள் ஒன்றாக வந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்டகத்தி படத்திற்கு முன்பு என்னை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரிடத்திலும் அறிமுகப்படுத்தி திறமையான இசை கலைஞர் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டவர் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா.‌ நான் எப்போதெல்லாம் சோர்ந்து போகிறேனோ அப்போதெல்லாம் உற்சாகப்படுத்துபவர் மிர்ச்சி சிவா தான்.

மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் தான் நான் இசையமைக்க வேண்டிய முதல் திரைப்படமாக இருக்க வேண்டியது.‌ அந்தப் படத்தின் இசை வேறு வடிவமாக இருக்கும் நீ வேண்டாம் என்று நாசுக்காக மறுத்தவர் மிர்ச்சி சிவா.

அதன் பிறகு சி.வி.‌குமார் என்னை ஒருநாள் சந்தித்தார். என்னுடைய இசை எல்லாம் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது, ஒரு மூன்று மாதம் காத்திருங்கள் என்றார். சொன்னது போல் மூன்று மாதம் கழித்து வந்தார், பா. ரஞ்சித்தை அறிமுகப்படுத்தினார்.‌ அவருக்கு என்னுடைய இசை பிடிக்கவில்லை. இந்த மக்களை பார் என்று அழைத்துச் சென்று காண்பித்தார். அதன் பிறகு ஃபோக் மியூசிக்கை பற்றி தெரிந்து கொண்டேன்.‌ உண்மையை சொல்லப் போனால் என்னை ஒரு கலைஞராக மாற்றியது பா. ரஞ்சித் தான்.

எனக்கு கிடைத்த முதல் மூன்று படங்கள் என்னை அடையாளப்படுத்தியவை. இதற்காக இந்த மூன்று இயக்குநர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைக்கும் போது உணர்வுப்பூர்வமாக இருந்தது. அது மறக்க முடியாத அனுபவம். இந்த மூன்று இயக்குநர்களிடம் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.

சூது கவ்வும் 2 படத்திற்கு இசையமைத்த அறிமுக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். அவர் இங்கு மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தினார். இது என்னை மிகவும் கவர்ந்தது. இந்த இசை அமைப்பாளருக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் வாய்ப்பு வழங்குங்கள் என்று தயாரிப்பாளர் சி வி குமாரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சூது கவ்வும் 2 குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.‌ இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *