திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சி. வி. குமார் மற்றும் எஸ் .தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முகா ஃபிலிம்ஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.
இம்மாதம் பதிமூன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர். ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை, இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத், படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ், கலை இயக்குநர் சுரேந்தர், நடிகர்கள் வாகை சந்திரசேகர், மிர்ச்சி சிவா, அருள்தாஸ், ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் தொடக்கமாக ‘சூது கவ்வும் 2 ‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மேடை ஏறி இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தங்கராஜ் பேசுகையில், ”சி வி குமார் ஸ்கூலில் இருந்து ஏராளமான திறமைசாலிகள் உருவாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் என்னை சந்தித்தார். அவர் முதலில் ‘பீட்சா 4 ‘ படத்தை உருவாக்குவதற்காக தான் சந்தித்தார். அந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதி முடித்த பிறகு ஒரு நாள் ‘சூது கவ்வும் 2’ படத்தின் கதையை எழுதி முடித்து விட்டேன். உங்களிடம் சொல்கிறேன், கேளுங்கள் என்றார். அப்போது அவரிடம் முதலில் பீட்சா 4 படத்தை தயாரிப்போம். சூது கவ்வும் 2 படத்தின் பட்ஜெட் அதிகமாகும் என நினைக்கிறேன் என்றேன். கதையை முழுமையாக கேளுங்கள், அதன் பிறகு தீர்மானிக்கலாம் என்றார்.
நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் ‘சூது கவ்வும்’ முதல் பாகத்தை தொடர்ச்சியாக மூன்று காட்சிகள் பார்த்து வியந்து இருக்கிறேன். அது ஒரு கல்ட் கிளாசிக் மூவி. இது மனதில் ஓடியதால் பீட்சா 4 படத்திற்கு முன்பாக சூது கவ்வும் 2 படத்தினை தயாரிக்கலாம் என ஆசைப்பட்டேன். அப்படித்தான் இந்த படத்தின் பணிகள் தொடங்கின.
முதலில் மிர்ச்சி சிவாவிடம் பேசி ஒப்பந்தம் செய்தோம். அவர் ‘கலகலப்பு’, ‘சென்னை 28’, ‘தமிழ் படம்’ ஆகிய படங்களின் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். அனைத்தும் வெற்றி பெற்ற படங்கள். இந்த செண்டிமெண்ட் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்தோம். அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியை தந்தது.
அதன் பிறகு நானும், சி வி குமாரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கத் தொடங்கினோம். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அதற்காக இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் வரும் 13ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.