‘சூது கவ்வும் 2’ மிகப்பெரிய நகைச்சுவை படைப்பாக இருக்கும்! – நடிகர் பாபி சிம்ஹா

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சி. வி. குமார் மற்றும் எஸ் .தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முகா ஃபிலிம்ஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.

இம்மாதம் பதிமூன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர். ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை, இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத், படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ், கலை இயக்குநர் சுரேந்தர், நடிகர்கள் வாகை சந்திரசேகர், மிர்ச்சி சிவா, அருள்தாஸ், ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் தொடக்கமாக ‘சூது கவ்வும் 2 ‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மேடை ஏறி இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ”பா ரஞ்சித் அவருடைய திருமணத்திற்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அழைப்பிதழை அனுப்பி இருந்தார். அதன் பிறகு அவருடனான நட்பு தொடர்ந்தது. ஒரு நாள் அவர் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது.‌ அட்டகத்தி படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கார்த்திக் சுப்பராஜ் சொன்ன பீட்சா கதை பிடித்தது, அந்த படத்தின் பணிகளையும் தொடங்கினேன்.

இவரிடம் நல்ல ஒரு கதை இருக்கிறது என்று நலன் குமாரசாமியை அறிமுகப்படுத்திய பிறகு கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் சொன்னார்.‌ அதன் பிறகு அவர் சொன்ன கதையும் பிடித்தது.

சந்தோஷ் நாராயணனை சந்தித்தபோது அவர் வேறு ஒரு படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய திறமை எனக்கு பிடித்திருந்தது, நம்பிக்கையும் இருந்தது.

பா. ரஞ்சித் என்னை சந்தித்தபோது இசை யுவன் ஷங்கர் ராஜா தான் வேண்டும் என்று கேட்டார். அவரை சமாதானப்படுத்தி சந்தோஷ் நாராயணனை ஒரு முறை சந்தியுங்கள், அவருடன் பணியாற்றுங்கள், பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம் என்றேன்.

சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதிக் கொடுங்கள் என்று நலன் குமாரசாமியிடம் கேட்டேன். அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை, அதன் பிறகு அவரிடம் கதை கருவை கொடுங்கள். நாங்கள் திரைக்கதை எழுதிக் கொள்கிறோம் என்று நான் அனுமதி கேட்டேன். அர்ஜுன் திறமையான எழுத்தாளர். அவருக்கு கதையைப் பற்றிய அறிவு நிறைய இருக்கிறது. இன்று ஏராளமானவர்களுக்கு காமெடியை காட்சிப்படுத்த தெரியவில்லை. ஆனால் இயக்குநர் அர்ஜுன் அதனை இந்தப் படத்தில் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்.‌

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார்கள்.

இந்தப் படம் இன்று இந்த அளவிற்கு ரசிகர்களை சென்றடைகிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் தயாரிப்பாளர் தங்கராஜ் தான். திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது, திரையரங்கில் பார்த்து ரசிக்கும் வகையிலான படம். அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தின் பணிகள் நிறைவடையும் முன்பே அடுத்த பாகத்திற்கான கதையையும் அர்ஜுன் எழுதிக் கொடுத்து விட்டார். அந்த படமும் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன். எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.

இயக்குநர் எஸ் ஜே அர்ஜுன் பேசுகையில், ”தயாரிப்பாளர் சி வி குமார் நிறைய விஷயங்களை மனதிற்குள் வைத்திருப்பார்.‌ அது நடைபெறும் போது தான், சாத்தியமாகும் போது தான், அவர் என்ன நினைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்வு திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்டின் ரீ யூனியன் நிகழ்வாக இருக்கிறது.

நான் முண்டாசுப்பட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பா ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரை பார்க்கும்போது எனக்குள் பயம் இருக்கும். அந்த பயம் தற்போது எனக்கு மீண்டும் வந்து விட்டது இவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கிறேன்.

சூது கவ்வும் 2 படத்தினை இயக்குவதற்காக எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. படத்தை ஓரளவு சிறப்பாகவே செய்து இருக்கிறோம். இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி பார்த்துவிட்டு திட்டாமல் இருந்தாலே வெற்றி பெற்றதாகவே நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்த கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சி வி குமாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் தங்கராஜை அவருடைய உணவகத்தில் சந்தித்து முதலில் பீட்சா 4 படத்தின் கதையை விவரித்தேன். அதன் பிறகு சூது கவ்வும் 2 படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அதை கேட்டுவிட்டு அவர் இந்த படத்தை தயாரிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் பாபி சிம்ஹா பேசுகையில், ”சூது கவ்வும் 2 படத்தின் முன்னோட்டம் சிறப்பாக இருக்கிறது, மிகப்பெரிய நகைச்சுவை படைப்பாக இருக்கும் என்று நம்பிக்கையே உண்டாக்குகிறது. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனென்றால் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்திருக்கிறார். சில பேரால் தான் சில கேரக்டர்களை ஏற்று நடிக்க முடியும். இந்த வகையில் இந்த படத்தில் இடம்பெறும் குருநாத் என்ற கேரக்டரை சிவாவால் மட்டுமே நடிக்க முடியும். அவர் நன்றாக நடித்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.‌

சி. வி. குமார் சார் ‘சூது கவ்வும் 2’ வெல்லும், கவலைப்படாதீர்கள். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் நடித்தேன். என் நடிப்பு மீது இயக்குநருக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. எடிட்டர் சில காட்சிகளை பார்த்துவிட்டு பாபி சிம்ஹா நன்றாகத்தான் நடிக்கிறார் என்று சொன்ன பிறகுதான் இயக்குநருக்கு நம்பிக்கை வந்தது.

தயாரிப்பாளர் சி வி குமாரிடம் சம்பளம் வாங்கிய அனுபவம் மறக்க முடியாதது.‌ இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும்,” என்றார்

நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், ”தயாரிப்பாளர் சி வி குமாரும், இயக்குநர் அர்ஜுனும் என்னை சந்தித்தனர். சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர். இந்தப் படத்திற்கு நலன் குமாரசாமி ஒரு அவுட்லைனை சொல்லி இருக்கிறார், அதனை நாங்கள் விரிவுபடுத்தி இருக்கிறோம் என இயக்குநர் அர்ஜுன் முழு கதையையும் சொன்னார், நன்றாக இருந்தது.

தயாரிப்பாளர் சி வி குமார் தமிழ் சினிமாவின் சொத்து. அவர் ஒரு பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்தில் வசதி இல்லை என்றாலும் திறமையான மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். இன்னும் நிறைய புதுமுக திறமைசாலிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து அவர் படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தயாரிப்பாளர் தங்கராஜ் தங்கமான மனிதர். படப்பிடிப்பு முழுவதும் சுவையான உணவை வழங்கினார். இந்தப் படத்திற்கான சம்பளம் காசோலையாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை விற்பனையான பிறகு சம்பளம் கிடைக்கும் என சொல்லி இருக்கிறார்கள். அதனை நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த படத்தில் வாகை சந்திரசேகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவம்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் அற்புதமான திறமைசாலி. அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துகள்,” என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *