‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா!

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் முருகன்.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது,

“எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தானே உருவாக்கிக் கொண்ட பாதையில் பயணித்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி ”
என்றார் .

படத்தில் நடித்திருக்கும் நடிகர் மேத்யூ வர்கீஸ் பேசும்போது,

“முதலில் என்னைத் தயாரிப்பாளர் தான் சந்தித்தார். வழக்கம் போல யூனிபார்ம் போடும் பாத்திரங்கள் தருவார்களோ என்று எனக்கு ஒரு தயக்கம்.இதைப் பற்றிக் கேட்டபோது இதில் அப்படி இல்லை நீங்கள் கதாநாயகனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்றார். அப்போதே நான் சம்மதித்தேன் .முதல் படம் தயாரிக்கும் அவரது தைரியமும் தெளிவும் பெரிய விஷயமாக இருந்தது. படம் எடுப்பது பெரிய விஷயம். செலவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அதைச் சரியாகச் செய்து முடிப்பது அதைவிட பெரிய விஷயம். படப்பிடிப்பில் நமது சௌகரியங்களைப் பார்த்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி, தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பாளர் என்று எல்லா மும் அவராகவே இருந்தார். இந்தப் படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். அதற்குப் பலனாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் ரகு ஸ்ரவன் குமார் பேசும்போது,

“இது எனக்கு மூன்றாவது படம். நான்கு பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன . நாலைந்து நாட்களில் பின்னணி இசை சேர்ப்புப்பணியை முடித்து விட்டேன் .அந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் ஏற்படுத்திய படம் “என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் கார்த்திகேசன் பேசும்போது,

“நான் ஒரு சிக்கலான மனிதன். என்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான்சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந்து திரிந்து வாய்ப்பு கேட்டு,ஒரு கட்டத்தில் மனம் வருந்தி கோயம்புத்தூருக்குச் சென்று விட்டேன். போன இடத்தில் என்னை வளர்த்துக்கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற்பனை இருக்கலாம் .அதனை செயல்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன். தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்ததால் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான் ஆண்டுக்கு ஒரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன்.
நான் மனிதர்களைச் சம்பாதித்ததால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கிறது “என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *