சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு குவியும் பாராட்டுகள்!

பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் சதமடித்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் அரசு உதவி பெறும் அண்ணாமலையார் மில்ஸ் பள்ளியின் வணிகவியல் பிரிவு மாணவியான எஸ்.நந்தினி, அனைத்துப் பாடங்களிலும் சதமடித்து 600/600 என்ற வரலாற்று சாதனையை படைத்திருந்தார். தச்சுத் தொழிலாளியின் மகளாக, சிறப்பு வகுப்புகள் மற்றும் தனிப்பட்ட தயாரிப்புகள் ஏதுமின்றி சாதனை படைத்திருக்கிறார் நந்தினி.
தமிழகத்தின் எளிய குடும்பங்களை சேர்ந்த சாமானிய மாணவிகளுக்கு முன்னுதாரணமாகவும் நந்தினி மாறி இருக்கிறார். அவருக்கு பல கட்சி அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து மாணவி நந்தினி வாழ்த்துப் பெற்றார். அவருக்கு இனிப்புகள் அடங்கிய பரிசுப் பொருளை வழங்கி முதல்வர் வாழ்த்துகள் தெரிவித்தார்.
  • மாணவி நந்தினியை நேரில் அழைத்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு தந்தை பெரியார் சிலையை பரிசாக அளித்து வாழ்த்தினார்.
  • நந்தினியின் சாதனையை பாராட்டும் விதமாக, ட்விட்டரில் வாழ்த்துப்பா ஒன்றினை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து தனக்கு பரிசாக கிடைத்த தங்கப்பேனாவை நந்தினிக்கு பரிசாக நேரில் வழங்கினார்.
தன்னுடைய சாதனை பற்றி மாணவி நந்தினி தெரிவித்தபோது, நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறு வயதில் இருந்தே இருந்தது. அதற்கு எனது குடும்ப சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பத்தின் வறுமை துவண்டு போக வைக்கும் விஷயமாக இருந்தாலும், நான் அதை அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. அதையே ஒரு தூண்டுதலாக எடுத்துக் கொண்டேன். குடும்பத்தில் நிலவிய வறுமைதான் என்னை சாதிக்க தூண்டியது என மாணவி நந்தினி தெரிவித்தார்.
– தேஜு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *