ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 10 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பிரபலங்களின் பேட்டிகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்
“நான் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது சூர்யாவிடம் ‘கங்குவா’ படத்தைப் பற்றி அடிக்கடி கேட்பேன். எப்போது படத்தைப் பற்றி பேசினாலும் சூர்யா உற்சாகமடைந்து விடுவார். ’கங்குவா’ படம் முடிந்த பின் கூட அவர் அந்த படத்தின் தாக்கத்தில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ’கங்குவா’ படத்தின் ஐந்து நிமிட காட்சியை சூர்யா என்னிடம் காட்டினார். இந்த படம் நம் அனைவரையும் பெருமைப்பட வைக்கும். இந்திய சினிமாவில் இந்த மாதிரி ஒரு படத்திற்காக நாம் எல்லாரும் பெருமைப்பட வேண்டும். சூர்யா இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர். ஹாலிவுட் ஸ்டைலில் நாம் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதுவோம். ஆனால், அதை எழுதும்போதே அப்படி எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்று தோன்றும் ஆனால் கங்குவா படத்தை உலக தரத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். சூர்யா நடிப்பில் ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ’கங்குவா’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் கார்த்தி
“எனது அண்ணன் சூர்யா சினிமாவில் நடிக்கச் சென்றபோது நடிக்கத் தெரியலனு சொன்னாங்க, ஆடத்தெரியலனு சொன்னாங்க, ஃபைட் பண்ணத் தெரியலனு சொன்னாங்க, நல்ல உடல் இல்லைனு சொன்னாங்க. எனக்குத் தெரியும் காலையில 3 மணி நேரம் ஃபைட் கிளாஸ், மாலையில் 3 மணி நேரம் டான்ஸ் கிளாஸ் போனார். ’ஆயுத எழுத்து’ படத்தில் நான் வேலை செய்தபோது அதில் சண்டைக் காட்சிகளில் ஃபைட்டர் மாதிரி சண்டை செய்தார். இன்றைக்கு அனைத்து ஜிம்களிலும் அண்ணனின் படம் இருக்கு. எல்லா பசங்களும் ஹெல்த்தை சீரியஸா எடுத்துக்க அண்ணன் காரணமாக இருக்காரு. எதெல்லாம் நெகடிவ்னு சொன்னங்களோ, அதை எல்லாத்தையும் தன் உழைப்பால் மாற்றிக்காட்டியவர். உழைத்தால் முன்னேறலாம் நினைத்த இடத்தை அடையலாம் என்பதற்கு அண்ணனைத் தவிர, சிறந்த எடுத்துக் காட்டு யாரும் இல்லை. படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் சார், நீங்க இங்க இருந்து இருக்கனும் சார். நான் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் உதவி ஆர்ட் டைரக்டர். அவரது உழைப்பு எனக்கு தெரியும். ’கங்குவா’ படத்திற்காக அவர் உருவாக்கியுள்ள உலகம் காலத்திற்கும் பேசப்படும். அவர் இங்கு இல்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. சிவா சார் ‘கங்குவா’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும்” என பேசினார்.
நடிகர் யோகிபாபு
“சிவா சாருடன் ‘வீரம்’ படத்தில் அஜித் சாருடன் பணிபுரிந்தேன். அதன்பிறகு ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ படங்களில் நடித்தேன். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா சாருடன் ஒரு காட்சி நடித்தேன். பின்பு அவர் சொல்லி ‘கங்குவா’ படத்தில் முழுவதும் நடித்திருக்கிறேன். சூர்யா சார் கடுமையான உழைப்பாளி. என் உடன்பிறந்த சகோதரர்தான். நீங்கள் அடுத்து உலக சினிமாவுக்கும் செல்ல வேண்டும்” என்றார்.
நடிகர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி
“நான் காலேஜ் படிக்கும் போது வந்த படம் ’காக்க காக்க’. அந்த படம் தான் சூர்யா சார் நடித்து நான் பார்த்த முதல் படம். அந்த படத்தை தொடர்ந்து ‘பிதாமகன்’, ‘ஆயுத எழுத்து’, ‘கஜினி’ இந்த படங்கள் நான் காலேஜில் படிக்கும் போது பார்த்த படம். இப்படி திரையில் நான் பார்த்து வியந்த ஒருத்தர் தான் சூர்யா. இதே நேரு ஸ்டேடியத்தில் பல நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க இருக்கிறேன். தற்போது சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முக்கிய காரணம் சூர்யா தான். அவர் என் கதையை கேட்டு என்மீது நம்பிக்கை வைத்ததால் தான் இது சாத்தியமானது. அனைவரும் இணையத்தில் What are you cooking bro என்று கேட்குறீர்கள். பயங்கரமாக மாஸாக சமைத்து அடுத்த வருடம் தரப்படும் அதற்கு நான் கேரண்டி. சூர்யா சார் அரசியலுக்கு வரவேண்டும் என்று போஸ் வெங்கட் சார் சொன்னார். அவரின் இந்த கருத்தில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் இதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஒரு அரசியல்வாதி என்பது வெறும் தேர்தலில் நிற்பது மட்டுமில்லை. ஒரு தெருவில் மரம் விழுந்து, அதை நான்கு பேராக சென்று எடுத்துப் போட்டால் அவர் தான் அரசியல்வாதி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சின்ன சின்னதாக நல்லது செய்தால் அவரும் அரசியல்வாதிதான். அந்தவகையில் சூர்யா சார் அரசியல்வாதியாக மாறி ரொம்ப வருஷம் ஆகிறது. இந்த அரசியலே உங்களுக்கு போதும் சார். மாற்றம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்கவைத்து 25 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார். இந்த அரசியலே அவருக்கு போதுமானது” என்றார்.