சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 10 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’.  இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் பேசிய இயக்குநர் சிவா, ‘கங்குவா’ படத்தை இரண்டு வருடங்கள் எடுத்தோம். அந்த காலத்தில் சூர்யாவுடன் பழகுவதற்கான அற்புத வாய்ப்பை இறைவன் கொடுத்ததற்கு நன்றி. நூறு சதவீதம் கொடுத்திடலாம் என்று 100 தடவை சூர்யா என்னிடம் சொன்னார். நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால் அதை சலிக்காமல் செய்தார். கங்குவா கதாபாத்திரம் நடிப்பதற்கு மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலம் தேவை. அதை மிகச்சிறப்பாக செய்தார் சூர்யா. சிறுத்தை சிவா என்ற அடையாளத்தை ஞானவேல் ராஜா எனக்கு கொடுத்தார். அடுத்த 15 வருடங்களுக்கு ’கங்குவா’ எனது கரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய அப்பா இப்போது உயிரோடு இல்லை. அவர் இருந்திருந்தால் நிறைய சந்தோஷப்பட்டிருப்பார். எனது மனைவி இதுபோன்ற விழாக்களுக்கு வரமாட்டார். சண்டை போட்டு அவரை வரவைத்தேன். ’கங்குவா’ படத்திற்கு ஒப்பந்தமான பிறகு, கண்டிப்பாக இரண்டு வருடங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டப்படுவேன் என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் என்னையும், எனது குடும்பத்தையும் மனைவிதான் சந்தோஷமாக பார்த்துக்கொண்டார். அவருக்கு நன்றி.

இந்தப் படம் அருமையாக இருக்கிறதாக இதுவரை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கமர்ஷியலாக படம் பண்ணிக்கொண்டிருந்தவன் நான். அது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில் மக்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் செய்வது சாதாரண விஷயமில்லை. இந்த மாதிரியான ஒரு படம் பண்ணலாம் என்று ஆசைப்பட்டபோது அந்த ஆசைக்கு அடித்தளம் என்னுடைய நண்பர், வழிகாட்டி, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கக்கூடிய அஜித் சாரிடம் இருந்துதான். இத்தனை பேரின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் அவரின் நம்பிக்கையை என்னிடம் வைத்தார். சிவா நீ இருக்கக்கூடிய உயரம் இது இல்லை. உனக்கு சினிமாவில் எல்லாமே தெரியுது. நீ சிறகடித்து பறக்க வேண்டும். வானம் மொத்தம் உனக்கு என்று சொன்னார். கங்குவா திரைப்படம் அழகான முயற்சி, கடுமையான உழைப்பு. இதற்கு இறைவன் கண்டிப்பாக பலன் கொடுப்பார்” என்றார்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், “சூர்யா மிகச்சிறந்த நடிகர். இந்த மாதிரியான படத்தில் பணியாற்ற அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஆசை இருக்கும். அது எனக்கு இதில் நிறைவேறியிருக்கிறது. எவ்வளவுதான் படத்தில் டெக்னீஷியன்கள் வேலை செய்தாலும் ஒரு கதாநாயகன் தான் அந்தப் படத்தின் முகம். சூர்யா அனைவரையும் சமமாக மதிப்பவர்” என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை உருவாக்குவதில் சிவா மிகப்பெரிய வெற்றியை இந்தப் படத்தில் பெற்றுள்ளார். அவரது இன்னொரு முகத்தை பார்த்தேன். சூர்யா சார் தனது நடிப்பின் உச்சத்தை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். காலத்திற்கு ஏற்ப புதிய மனிதனாக இந்தப் படத்தில் தன்னை மாற்றியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் படம் நெருப்பாக வந்திருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியபொழுது “’புஷ்பா2’ படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் சிவா சார் என்னை சந்தித்து இந்தக் கதை சொன்னார். இவ்வளவு பிரம்மாணட கதையை சாத்தியமாக்கியது பெரிய விஷயம். தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். சூர்யா சாருடன் நெருங்கிப் பழகும் இந்த வாய்ப்பு இதில் கிடைத்தது. மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். பாபி தியோலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் நான் 3 பாடல்களை எழுதி இருக்கிறேன். நான் எழுதிய பாடல்களைவிட, விவேகா எழுதிய மன்னிப்பு என்கிற பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். ’பாகுபலி’ படத்திற்கு வசனம் எழுதிய போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி, ரொம்ப நாட்களுக்கு பின் இந்த படத்தில் கிடைத்தது. அந்த படத்தை பார்த்த போது எனக்கு மனதிற்குள் என்ன அதிர்வு இருந்ததோ அந்த அதிர்வு என் மனதிற்குள் இருந்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சிவாவிற்கு நன்றி. அவரின் கனவு அடுத்தடுத்த படத்தில் வெளிவரப்போகிறது. ’கங்குவா’ பத்து பாகமாக வரக்கூடிய அளவிற்கு அதில் கதை உள்ளது” என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *