கொட்டுக்காளி விமர்சனம்

தமிழ்த்திரையுலகின் இளம் உச்சநட்சத்திரம் ஆருயிர் இளவல் சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில், ஆருயிர் இளவல் சூரி அவர்களின் காத்திரமான நடிப்பில், அன்புத்தம்பி வினோத்ராஜ் அவர்களின் இயக்கத்தில் உலகத்தரமான படைப்பாக ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வெளியாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழ்த்திரைத்துறையில் நல்ல கதை களத்திற்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகக் கூறப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மகாராஜா, கருடன், தங்கலான், வாழை, கொட்டுக்காளி என்று அடுத்தடுத்து வெளியாகும் தமிழ்த்திரைப்படங்கள் கனமான கருப்பொருளோடு வெளியாவது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

குறைந்த பொருட்செலவில், மிகச்சிறிய கதைக்களத்தில், வழக்கமாகத் திரைக்கதைக்கு உயிரோட்டமளிக்கும் இசையென்று ஏதுமின்றி, சிறிதும் சோர்வோ, சலிப்போ ஏற்படாமல் ஒரு திரைப்படத்தைச் சுவைபட படைக்க முடியும் என்பதே மிகப்பெரிய சாதனை.

கிராமத்தின் வாழ்வியலில் நுணுக்கமான காட்சியமைப்புகளை அமைத்து அதனைச் சாத்தியப்படுத்தி, பன்னாட்டு திரைப்படங்களுக்கு இணையான உயரத்தில் தமிழ்த்திரைக்கலையைச் சிறகடிக்க செய்துள்ள இயக்குர் அன்புத்தம்பி வினோத்ராஜ் அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த பாராட்டுகள்! தம்பியின் முந்தைய ‘கூழாங்கல்’ திரைப்படம் போல் கொட்டுக்காளியும் விருதுகள் பல வெல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தம்பி சூரி அவர்கள் தம்முடைய அபாரமான நடிப்பாற்றலால் அடுத்தடுத்து தான் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் மூலமும் நடிப்பின் உச்சத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார். தமிழ்த்திரைத்துறையின் தவிர்க்க முடியாத கலைஞனாக தம்பி சூரி திகழ்வார் என்பதற்கு ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் மற்றொருமொரு சான்று.

கதையின் நாயகியாக வரும் அன்னா பென் அவர்கள் வெறித்துப் பார்க்கும் கண் பார்வையிலேயே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படத்திற்கு வலிமைசேர்த்துள்ளார்.

கதையின் மீது நம்பிக்கை வைத்து, இப்படியொரு கருத்தாழமிக்க கலைப்படைப்பினைத் தயாரித்து வழங்கியுள்ள அன்பு இளவல் சிவகார்த்திகேயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்னும் ஆகச்சிறந்த கலைப்படைப்புகளைத் தயாரித்து, தமிழ்த்திரைக்குப் பெருமை சேர்க்க தம்பி சிவகார்த்திகேயனுக்கு என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

சமகாலத்தில் பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான பாலியல் குற்றங்களும், வன்கொடுமைகளும் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், ஒரு பெண்ணை எப்படி இந்தச் சமூகம் ஆணாதிக்க மனநிலையோடு போகப்பொருளாக வீட்டுக்குள்ளேயே கட்டி வைத்திருக்கிறது என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது. அதைப்போல, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 8க்கும் மேற்பட்ட சாதிய ஆணவப்படுகொலைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான மிகப்பெரிய கேள்வியை இத்திரைபபடம் ஒவ்வொரு தமிழர்களின் மத்தியிலும் எழுப்பியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் – நடிகைகள் உட்பட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

நல்ல திரைக்கதைகளுக்கு எப்பொழுதும் சிறப்பான வரவேற்பை வழங்கும் தமிழ்த்திரை ரசிகர்கள், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தையும் திரையரங்கிற்குச் சென்று கண்டு களித்து, மிகப்பெரிய வெற்றிப்படைப்பாக்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *