ஜமா திரைவிமர்சனம்

ஜமா திரைப்படம் பார்த்தேன்.முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் அன்பு முத்தங்கள். தெருக்கூத்துக் கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்.

நான் சிறுமியாக இருக்கும்போது அம்மா அப்பா இருவரும் மாதம் ஒருமுறையாவது குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துப் போவார்கள். ஈரோடு மாவட்டம் காங்கயத்திற்கு அருகில் உள்ள மடவிளாகம் அங்காளம்மன் கோயில். அங்கு வருடத்திற்கு ஒருமுறை சிவன்ராத்திரி அன்று குண்டம்(தீ மிதித்தல்) இறங்குவார்கள். அந்த சமயத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் அந்த நிகழ்வில் ஒன்றுகூடி தீ மிதித்து, தூங்காமல் இருந்து அம்மனை வழிபடுவார்கள்.அப்படி ஒரு நாளில்தான் அங்கு நடந்த தெருக்கூத்தை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நெறிஞ்சி படர்ந்திருந்த வெட்ட வெளியில் துண்டை விரித்துப் போட்டு அமர்ந்தபடி கண்ணகியின் ஆவேச வசனங்களையும், தலைவிரி கோலத்தையும் , கோவைப்பழம் போல சிவந்த கண்களையும் பார்த்து பயத்தில் அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டதும் நினைவு வருகிறது. அடுத்த நாள் காலையில் கண்ணகி வேடமிட்ட அண்ணனைச் சுற்றி சிலபேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் . அப்பா இவருதான் அந்த கண்ணகி வேசம் போட்டவரு என்று எனக்கும் அறிமுகப்படுத்தினார். அதுவரை வேடமிட்டு ஆடியது பெண்தான் என்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு அப்பா அப்படிச் சொன்னதும் ஒன்றும் புரியவில்லை. அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒடுக்கமான கன்னங்கள், அகண்ட கண்கள், மீசை மழித்த தாடை ,மெலிந்த உடல் இவரா அது அழுது புரண்டு அத்தனை கைதட்டுகளை வாங்கியவர் என்று அதிசயமாக இருந்தது. பிறகு வந்த வருடங்களில்தான் தெருக்கூத்தைப் பற்றிய அறிவும் , அடவு கட்டும் கலைஞர்களைக் குறித்த புரிதலும் வந்தது. ஆனால் சமீபமாக கோயில்களில் தெருக்கூத்து நடப்பது குறைந்து விட்டது. அப்படியே நடந்தாலும் யாரும் விரும்பிப் பார்ப்பதில்லை. இதனால் கூத்துக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

பொதுவாக கிராமங்களில் பெண்கள் சற்று நெஞ்சை நிமிர்த்தி நடந்தால் “ஆம்பளையாட்ட நிமித்திட்டு நடக்கறா பாரு. குனிஞ்சு நட புள்ள” என்று அதட்டுவார்கள் . நான் நல்ல உயரமாகவும் உடம்பாகவும் இருப்பதால் என்னவோ பள்ளிக்கூடத்தில் நடனப் போட்டி , நாடகம் என எதில் கலந்து கொண்டாலும் ஆண் வேடம்தான் கிடைத்திருக்கிறது. அதற்காகவே நான் குழுவாக நடக்கும் போட்டிகளைத் தவிர்த்து தனிப் போட்டிகளில் கலந்து கொள்வேன்.ஆண்கள் ,பெண்கள் இருவருக்குமானது மட்டுமல்ல இந்த உலகு. திருநங்கைகள் ,திருநம்பிகள் என மாறி நிற்கும் ஒவ்வொரு உயிருக்குமானது இந்தப் பிரபஞ்சம் என்பதை நினைவில் கொள்வோம்.

ஜமா படத்தில் பாரி ஒரு பெண் வேடமிடும் கூத்துக் கலைஞனாக நடித்திருக்கிறார். தொடர்ந்து பெண் வேடமிட்டு நடித்துக் கொண்டிருக்கும்போது அவரது நடவடிக்கைகளில் பெண் தன்மை சற்று மேலோங்க அதை வைத்து ஊரில் உள்ளவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். திருமணமும் தள்ளிப் போகிறது. ஆனால் பாரியின் நோக்கமோ தன் தந்தை இழந்த ஜமா வை மீட்டு தனது அம்மா ஆசைப்பட்டபடி அர்ச்சுனனாக அடவு கட்டுவதுதான். அதற்காகச் சொத்துகளையும், காதலையும் கூட இழக்க முன்வருகிறார்.

இத்திரைப்படத்தில் பாரியின் நடிப்பைப் பார்த்து சிலிர்த்துப் போனேன். அவரின் ஒவ்வொரு திசுக்களிலும் அந்தக் கலையும்,பண்பாடும் ஊறிப்போய் இருக்கிறது. கண்கள், முகம், கை, கால்கள் ஏன் பாரி அணிந்திருந்த ஆடைகள் கூட இத்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கின்றன. பாரி நடிகராக எப்படி ஜெயித்திருக்கிறாரோ ஓர் இயக்குனராக இன்னும் ஒரு பங்கு அதிகமாகக் கொண்டாடப்படுவார்.

ஒரு கலையை நேசிக்கும் ஒருவன் அதிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும்போது அவன் என்னவாக ஆவான் என்பதையும், கலைஞர்களுக்கிடையே எத்தனை போட்டி பொறாமைகள் இருந்தாலும் கலையின் முன் அவனது அத்தனை அகம்பாவங்களும் கூனிக் குறுகி ஒடுங்கும் என்பதையும், ஒரு துறையில் நமக்கிருக்கும் ஆர்வம், அதற்கான விடா முயற்சி , நம்பிக்கை இவை இருந்தால் வெற்றி அதுவாக நம்மை வந்து தழுவிக் கொள்ளும் என்பதையும் இயக்குனராக சக கலகஞர்களை வைத்து படமாக்கி இருக்கிறார் பாரி.

இசைஞானி சொல்லவே வேண்டாம்.
ஒவ்வொரு காட்சியும் அவரின் மந்திரக்கோலால் ஆசீர்வதிக்கப்பட்டவையாக இருக்கின்றன. ஒரு பாடல் தொடங்கும் இடம் இங்குதான் என்பதை அறிந்து படத்தின் உயிரோட்டத்தை மேலும் உறுதி செய்திருக்கிறார்.

மணிமேகலை நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். நாயகனிடம் கோபித்துக் கொண்டு வயலில் அழுது புரண்டு விழுவது . மகனை பெண் பார்க்க அழைத்துச் செல்வது என தனக்குக் கொடுத்த கதாப்பாத்திரத்தை வெகு நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.

தயாள் மற்றும் சேத்தன் சிறப்பான தேர்வு. இருவருக்குள்ளும் இருக்கும் நடிகர்களைக் கண்டறிந்து நடிப்பதற்கான களத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இருவரும் அதில் முத்திரை பதித்து விட்டார்கள்.

அம்மு அபிராமியின் காதலும், கோவமும் அளவாகவும் அழகாகவும் இருந்தது.

சத்யா மருதாணி என் தோழி என்பதற்காக இதைச் சொல்லவில்லை . என்னதான் நடிக்கத் தெரிந்தாலும் கேமராவிற்கு முன்னால் நிற்கும்போது நடுக்கம் வந்துவிடும். சத்யாவிற்கு திரைத்துறை வாய்ப்பு அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை . அவளுக்கு பெரிதாக அறிமுகம் இல்லாத ஒரு துறையில் அவளின் முயற்சியால் மட்டுமே இந்த இடத்தை அடைந்திருக்கிறாள். அவளுக்கு அம்மு அபிராமியின் அம்மாவாக நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குனருக்கு நன்றி. வசனங்களே இல்லாத படங்கள் தான் இதுவரை வந்தது ஆனால் இந்தப்படம் சத்யாவிற்கு நல்ல தொடக்கம். இப்படியே பிடித்துக் கொண்டு உச்சம் தொடுவாள் என்று நம்புகிறேன்.

ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் பார்த்தா இருவருக்கும் வாழ்த்துகள்.
குறிப்பாக இந்தப் படத்தின் வசனங்கள் அத்தனை அழகு.

மேலும் இந்தத் திரைப்படத்தில் உழைத்திருக்கும், கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது அன்பு.குந்தி க்கு முத்தங்கள்.

லவ் யூ சகோதரா Pari Elavazhagan

– அம்பிகா குமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *