பள்ளி பயின்றதொரு காலம்…

வீட்டுக்கு எதிரே இருக்கிறது இந்தப் பள்ளிக்கூடம். 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய முயற்சி செய்தவர்களில் அப்பாவும் ஒருவர். அதில்தான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.

பள்ளியைச் சுற்றிலும் சுவர்கள் இருக்காது. விளையாட்டுத் திடலில் ஆடுகளும், மாடுகளும் உலவிக்கொண்டிருக்கும். தலைமை ஆசிரியர் அறை மற்றும் அலுவலகம் தவிர மற்ற எல்லா வகுப்புகளும் கூரைக் கொட்டகைகள்தான். தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியில் பித்தளை பெல் இருக்கும். அதில் ஒரு குச்சியைக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். பள்ளிக்கு முன்பு பெரிய வேப்பரம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்த வேப்பமரத்தடியில் அடிக்கடி வகுப்புகள் நடக்கும். அந்தச் சூழலே ரம்மியமாக இருக்கும்.

ஒரு கூரைக் கட்டடத்தில் நான்கைந்து வகுப்புகள் நடக்கும். சிறு மூங்கில் தட்டிகளைக் கொண்டு வகுப்புகளைப் பிரித்திருப்பார்கள். ஆண்டுதோறும் பெற்றோர் – ஆசிரியர் கழகத்தைக் கூட்டி பணம் வசூல் செய்து கூரை வேய்வார்கள். நான் படித்துமுடிக்கும் வரை அப்படித்தான் பள்ளிக்கூடம் இருந்தது. கீழே மணலாக இருக்கும். அதில் உட்கார்ந்துதான் பாடம் கேட்போம். சில ஆண்டுகளிலேயே கூரைகள் மறைந்துபோய், கட்டடங்கள் கான்கிரீட்டுக்கு மாறிவிட்டன.

தமிழ் என்றால் செங்கீரன், இராமலிங்கம். ஆங்கிலம் என்றால் டிடி சார்.. இயற்பியல் என்றால் சத்தியமூர்த்தி, வைத்திலிங்கம், கணிதம் என்றால் கருப்பையா, ஸ்தனிஸ்லாஸ், கிராப்ட் வாத்தியார், ஓவிய டீச்சர் என மறக்கமுடியாத ஆசிரியர்களால்தான் நாங்கள் கல்வியில் உயர்ந்தோம்.

அர்ப்பணிப்பும் கடமை உணர்வும் அக்கறையும் உடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். இன்னும் பள்ளி என்றால் மழைநாட்கள்தான் நினைவில் நிழலாடுகின்றன. மழைக்காலங்களில் மழைநீர் சொட்டும். அதனால் மழை வந்தாலே எப்படா… பெல் அடிக்கும் என்று காத்திருப்போம். யாராவது பையன் மணி அடிக்க ஓடினால்… ஓவோ,… என சத்தம் போடுவோம். அரை நாள் பள்ளி விடுமுறை விட்டுவிடுவார்கள். மழை பெய்யும்போதெல்லாம் பல நாட்கள் இப்படித்தான் நடைமுறை. நான்கு புறமும் திறந்த வகுப்பறை. பெரிய சுவர்கள் இருக்காது. சிறு கட்டைகள்தான் கட்டி வைத்திருப்பார்கள்.

பள்ளிக்குப் பின்னே தோட்டம் இருந்தது. கிராப்ட் வாத்தியார் கீரை வளர்ப்பார். ஒவ்வொரு வகுப்பாக தினமும் தண்ணீர் ஊற்றவேண்டும். சில நாட்கள் கழித்து கட்டுக் கட்டுக்காகக் கட்டி பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுத்துவிடுவார். மதிய உணவு போய் சத்துணவுத் திட்டம் அப்போதுதான் அறிமுகமாகி இருந்தது. குண்டு குண்டு அரிசியில் சமைத்து பருப்பு சாம்பார் ஊற்றுவார்கள். குழம்பு முழுவதும் பருப்பு நிறைந்திருக்கும். அதற்காக ஆற்றங்கரைக்குப் போய் தேக்கு இலைகள் பறித்துவருவோம். சில நேரங்களில் வீட்டில் சாப்பாடு. சில நாட்கள் பள்ளியில் சத்துணவு. முக்கியமான தினங்களில் சர்க்கரைப் பொங்கல் போடுவார்கள்.

பல ஆசிரியர்கள் பக்கத்து நகரமான கொரடாச்சேரியில் இருந்து வருவார்கள். நான்கு பேர் மட்டும் அக்ரஹாரத்தில் வகுப்புத் தோழன் கண்ணன் வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு ரொம்பவும் பயப்படுவேன். மரியாதை கலந்த பயம். கடைத்தெருவுக்கு நடந்துபோய் மளிகைச் சாமான்கள் வாங்கிவருவார்கள். சைக்கிளில் போனால் உடனே கீழே இறங்கி வணக்கம் தெரிவிப்போம். கையை காட்டி போகச் சொல்வார்கள்.

ராஜமாணிக்கம் என்றொரு பி.டி. மாஸ்டர் இருந்தார். பெரும் விவசாயி. காமராசர் போல் கதர்ச் சட்டையும் கதர் வேட்டியும் அணிவார். அப்பாவின் வகுப்புத்தோழர். நடராசன் பையனா… என்பார். பள்ளியின் ஜூனியர் கபடிக் குழுவில் இருந்தேன். மாவட்டம் முழுவதும் சென்று விளையாடி வருவோம். அவர் வீட்டில் இரவே போய் தங்கியிருந்து மறுநாள் பேருந்தில் கபடி போட்டி நடக்கும் ஊருக்குச் செல்வோம். இரவு பி.டி. சார் வீட்டில்தான் சாப்பாடு. அவ்வளவு ருசியாக இருக்கும். மறுநாள் வீட்டிற்குப் பின்னே நுரைபொங்க ஓடும் வெண்ணாற்றில் குளித்துவிட்டு புறப்படுவோம். இன்று நினைத்தாலும் மனதில் கரைபுரள்கிறது ஞாபக நதி.

பள்ளி வளாகத்தில் நெல்லிமரமும் அதற்கு அருகில் கிணறும் இருந்தது. கிணற்று நீரின் சுவை நாக்கில் ஊறுகிறது. மாதம் ஒரு முறை நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கிணற்றுக்குள் இறங்கி தூர் வாருவோம். பத்தாம் வகுப்புவரைகூட அந்தக் கிணறு இருக்கவில்லை. நீரின்றி வறண்டுபோனது. வேப்பமரத்தடியில் தமிழ் வகுப்புகள் நடக்கும். இடைவேளை நேரங்களில் சிவன்கோவிலில் போய் உட்கார்ந்துவிட்டு திரும்புவோம்.

பள்ளித் தோழன் ராமனைச் சந்திக்கும்போதெல்லாம் பள்ளிப்பிராயத்து ஞாபகங்களைப் பகிர்ந்துகொள்வோம். நொடிதொறும் நீரூறும் சுணைபோல ஊறிக்கொண்டே இருக்கிறது. கவிஞர் விக்ரமாதித்யன் கவிதை சொல்வதைப்போல… விரும்பியது நதிக்கரை நாகரிகம். வாய்த்தது என்னவோ நெரிசல் மிக்க நகரம். இந்த நகரின் வெம்மையை கிராமத்தில் கழிந்த இளம்பிராயமும் அனுபவங்களும் மனதை குளிரூட்டுகின்றன.

நன்றி: சுந்தரபுத்தன்

புகைப்படம் நன்றி: குக்கூ சிவராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *