கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி

மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் ‘மகாராஜா’: மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை புரோமஷனல் நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி முத்திரை பதித்து வருகிறது.

தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையில் இயங்கும் விட் ஈவன்ட்ஸ் குழு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மாவீரன்’, ‘போர் தொழில்’, ‘ஃபர்ஹானா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, கார்த்தியின் ‘ஜப்பான்’ உள்ளிட்ட படங்களுக்கு அமீரகத்தில் புரோமஷனல் நிகழ்ச்சிகளை நடத்தி கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘மகாராஜா’ படத்திற்கு துபாயில் உள்ள அதி உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற டிரைலர் திரையிடல் மற்றும் அமீரகத்தின் சிலிகான் மாலில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஆகியவற்றையும் பலரும் பாராட்டும் வகையில் மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் ஏற்பாடு செய்தது.

உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான ‘மகாராஜா’ டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் விட் ஈவன்ட்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனங்கள் ஏற்பாட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டது. தமிழ் திரைப்பட நிகழ்வுகள் புர்ஜ் கலீபாவில் அரிதாகவே நடைபெறும் நிலையில், இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் முன்னோட்டம் திரையிடப்பட்ட இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘மகாராஜா’ பெறுகிறது. இதற்கு முன் ‘விக்ரம்’ படத்தின் முன்னோட்டம் இங்கு வெளியானது. இரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் சுதன், ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய விஜய் சேதுபதி, ஒரு காலத்தில் நான் இந்த நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தேன். அதே ஊரில் இன்று பாராட்டு கிடைக்கிறது என வேடிக்கையாக குறிப்பிட்டார்.

முன்னோட்ட வெளியீட்டை தொடர்ந்து துபாய் லூலூ சிலிகான் சென்டிரல் மால் வளாகத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்களின் முன்னிலையில் தந்தை-மகள் இடையே பாசத்தை கூறும் தாயே தாயே பாடலுக்கு W.I.T குழுவை சேர்ந்த தந்தை-மகள் என 10 ஜோடி பங்குபெற்று பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதிக்கு துபாய் பொருளாதாரத் துறையின் முன்னாள் இயக்குநரும், தற்போதைய ஆலோசகருமான வலீத் அப்துல்மாலிக் முகம்மது அஹ்லி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். ஏற்றம் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தினேஷ்குமார் குருசுவாமி, கே.ஆர்.ஜி குழும நிறுவனங்களின் தலைவர் கண்ணன் ரவி, லைன் முதலீட்டு நிறுவனத்தை சேர்ந்த சிராஜ், ஃபர்தான் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேலாளர் முருகன் செல்லையா, துபாய் பெண்கள் கல்லூரியின் பேராசிரியை லக்‌ஷ்மி பிரியா உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழின் பெருமையை சொல்லும் கலை நிகழ்ச்சிகளையும், பல முன்னனி நடிகர்களின் படங்களுக்கு புரோமோஷன் நிகழ்ச்சிகளையும் அமீரகத்தில் தொடர்ந்து நடத்த விட் ஈவன்ட்ஸ் திட்டமிட்டுள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *