‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது,
” இந்தத் தயாரிப்பாளரின் நட்பு பலத்தை இங்கே பார்க்க முடிகிறது .அவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறார்கள். உறவுகளை விட நட்பு முக்கியம் .இந்தத் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநர் தனது சொந்தக்கதையை இயக்குவதில் பிரச்சினை இல்லை. ஓர் எழுத்தாளர் எழுதிய கதையை இயக்குவதில் கூட பிரச்சினை இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கதையை இயக்குவது என்பது பிரச்சினையான ஒன்று. அதுவும் படப்பிடிப்பில் கூடவே இருந்து நடித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர் என்றால் மேலும் சிரமமாக இருக்கும், பயமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நம் படைப்பு சுதந்திரம் அதில் இருக்குமா என்பது சந்தேகம். எனவே தயாரிப்பாளர் கதையை இயக்கி இருக்கும் இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் .இந்த சினிமாவில் மதம் கிடையாது, ஜாதி கிடையாது .வெளியில் போனால் தான் மதம் ஜாதி என்று வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
லாரா படத்தின் கதாநாயகன் அசோக்குமார் சினிமாவின் ஒரு கஜினி முகம்மது என்று சொல்வேன். அவர் தோல்விகளைச் சந்திக்கவில்லை, வெற்றிக்கான பயணத்தில் முயற்சியில் இருக்கிறார் .நான் புதிய கதாநாயகர்களுக்குச் சொல்லிக் கொள்வேன் .ஒரு படத்தில் 25 லட்சம் சம்பளம் வாங்கினால் அடுத்த படத்தில் 50 அடுத்த அடுத்த படங்களில் என்றால் உயர்த்தி ஒரு கோடி வரை செல்லலாம். ஆனால் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் அடுத்த படத்திலேயே மூன்று கோடி கேட்பார்கள் என்றால் அது அநியாயம். பேராசைப்பட வேண்டாம் படிப்படியாக உயர்த்தி வளருங்கள். அநியாயமாக உயர்த்த வேண்டாம் ” என்று கூறிப் படக் குழுவினரை வாழ்த்தினார்.
விழாவில் இயக்குநர்கள் காளி ரங்கசாமி, வீராயி மக்கள் படத்தின் கதாநாயகன் சுரேஷ் நந்தா, பாடகர் முகமது ரிஸ்வான். கதாநாயகிகள் வெண்மதி, வர்ஷினி வெங்கட், ஒளிப்பதிவாளர் ஆர்.ஜே.ரவீன்,கலை இயக்குநர் முருகன், எடிட்டர் வளர் பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.